Feeds:
Posts
Comments

Jeyamohan Bookஇந்நூலின் பகுதி-இரண்டு குறித்த ஒரு சுவாரசியமான தனி அனுபவம் எனக்கு உண்டு. கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் இயற்றப்பட்டிருந்த காலகட்டம் அது. ஜெயமோகன் அதற்கு எதிரானவர் என்பது தெரிந்த போது அந்த ‘கட்டாய மதமாற்ற தடைச்சட்டம்’ குறித்து அவரிடம் விவாதித்தேன். அவர் இறுதியாக தொலைபேசியை வைப்பதற்கு முன்னதாக கூறிய வார்த்தைகளை இப்போது நினைவு கூர்கிறேன்.

எனக்கு புள்ளியல் தரவுகளை வைத்துக் கொண்டு வாதாடுவதில் இஷ்டமில்லை. எனது உள்ளுணர்வு – ஒரு இலக்கியவாதி- என்கிற முறையில் இந்த சட்டத்தால் பயனில்லை என்றும் இதனால் பாரதத்துக்கு தீமைகளே அதிகம் என்றும் சொல்கிறது. இந்த தொகுப்பில் கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்துக்கு எதிராக ஜெயமோகன் பேசிய உரை பதிவாகியுள்ளது. இக்கட்டுரையில் எல்லா கருத்துகளையும் நான் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் உணர்ச்சி வசப்படும் இந்துத்துவர்களுக்கு ஒரு நல்ல எதிர்மருந்தாக இக்கட்டுரையை நான் இன்றைக்கு கருதுகிறேன். இக்கட்டுரை எழுப்பும் வினாக்களுக்கு ஒவ்வொரு இந்துத்துவரும் பதில் அளிக்க முயலவேண்டும். என்னுடைய பதில்களை இங்கே முன்வைக்கிறேன்.

கிறிஸ்தவம் கருணையையும் இஸ்லாம் சமத்துவத்தையும் முன்வைப்பதாக ஜெயமோகன் கருதுகிறார். கருணையையும் சமத்துவத்தையும் தன் எந்த நிலைப்பாட்டுக்கும் ஒரு முன்நிலையாக வைத்து விவாதித்தே ஒரு சமுதாயம் பரிணமிக்க வேண்டும் என்பதில் எனக்கு எவ்வித ஐயப்பாடும் கிடையாது. ஆனால் மத-மேலாதிக்க நோக்கத்துடன் செயல்படும் இருமதங்கள் அவற்றின் பின்னணியில் செயல்படும் ஆக்கிரமிப்பு சக்திகள், அவற்றுடன் சாதியத்தை அரசியலாக்கி வைத்துள்ள நம் சுயநல அரசியல், நம்முடைய பெரும் சமுதாய தேக்கத்தினுள்ளிருந்து எழும் தடைகற்கள் இத்தனைக்கும் அப்பால் ஒரு சிறு விவேகமான ஆனால் எவ்வித அரசியல் மற்றும் பொருளாதார சக்தி அற்ற இந்து சமுதாயக் குழு – எப்படி இந்த உரையாடல் ஒரு சமத்தன்மை கொண்ட தளத்தில் நடக்க இயலும்? ஒரு எளிய வழியை ஜெயமோகன் சொல்கிறார்: கிறிஸ்தவத்தை விட கருணை வாய்ந்ததாக இஸ்லாத்தை விட சமத்துவம் உடையதாக இந்து சமுதாயம் மாறிவிட்டால் போதுமே! மிக மிக எளிமையாக இருக்கிறது. ஆனால் இது அப்படி எளிமையான விஷயம் அல்ல. இன்று பிரச்சாரம் செய்யப்படும் இஸ்லாத்தின் சமத்துவம் இருபதாம் நூற்றாண்டு பிரச்சார உருவாக்கமே தவிர வரலாற்று யதார்த்தமல்ல. அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தை தொடங்கிய சையது அகமது கானின் எழுத்துக்களில் அப்பட்டமான சமத்துவமின்மையை தரிசிக்க முடியும். குலக்குழுக்களின் மேலாதிக்கம் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படும் வரை பெரும் சமூக பொருளாதார சுரண்டல் முறையாகவே அரேபியா முழுமைக்கும் இருந்தது. இன்றைக்கும் இஸ்லாமிய சமத்துவத்தை பெரும் பிரச்சாரம் செய்யும் வகாபியிசத்தின் பூலோக சுவன பூமியான சவூதி அரேபியாவில் குலக்குழு அடக்குமுறை படுமோசமான வன்முறையாக படர்ந்தொளிருகிறது. கிறிஸ்தவத்தின் கருணையும் காலனிய மேலாதிக்கம் இழைத்த மானுட அழிவுகளின் உபரியிலிருந்து பெறப்பட்ட சிறு துளியே. இன்று நாம் காணும் ஐரோப்பிய அமெரிக்க சமுதாயங்களின் பிறப்படிப்படையிலான வேற்றுமைகள் அற்ற சமுதாயத்துக்கு உலகம் கொடுத்துள்ள அழிவு விலை கற்பனை செய்யப்படமுடியாத கொடூரம் கொண்டது. இந்த இரத்தத்தால் கெட்டியாக்கப்பட்ட அஸ்திவாரத்தின் வலிமையின் மீது ஏறி நின்று கருணையையும் சமத்துவத்தையும் பிரச்சார கவர்ச்சியாக பயன்படுத்தும் கிறிஸ்தவ இஸ்லாமிய மதமாற்றங்கள் இந்த தேசத்தை எதில் கொண்டுவிடும்? ஆப்கானிஸ்தானும் பங்களாதேஷும், பிலிப்பைன்ஸும், லத்தீன் அமெரிக்க நாடுகளும், இந்தியாவின் வடகிழக்கும் சான்று பகர்கின்றன.

“மதமாற்றம் இந்தியப் பண்பாட்டை அழித்துவிடுமா?” எனும் கேள்விக்கு ஜெயமோகன் தயக்கமே இல்லாமல் ஆம் என்கிறார். அந்த அழிவினை அவர் ஒன்றும் ஒதுங்கியிருந்து காணவில்லை. அது தன்னுடைய அழிவும் கூட என்பதனையும் கூறுகிறார். இந்தியாவை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு கருத்தியல் அளவில் நெருக்கமாக சென்ற ஒரு தருணமாக இக்கட்டுரையின் தொனி தென்படுகிறது.

தேங்கி நாறி சடங்குக்குட்டையாக இந்துமதம் இந்த தேசத்தில் இருப்பதைவிட அது அழிந்து கிறிஸ்தவ நாடாகவோ இஸ்லாமிய நாடாகவோ ஆவதே மேல்.

ஏனெனில் இந்த உரையில் அவர் கவனத்தில் வராதது அந்த வெற்றிடத்தில் இங்கே கொலுவேறப்போகும் சமயங்கள் சமத்துவத்தையும் கருணையையும் அடிப்படையாக கொண்டவையாக இருக்குமா? 90 விழுக்காடு கிறிஸ்தவமான மிசோக்களால் அடித்து விரட்டப்பட்டு இன்று அகதிகள் முகாம்களில் கடந்த பத்தாண்டுகளாக தம் சமூகக்குழுவின் அழிவை கண்கூடாக தரிசித்து வரும் சக்மா-ரியாங்க் வனவாசிகள் அதனை ஏற்பார்கள் என தோன்றவில்லை. இன்று இஸ்லாத்தின் முழு பிடியில் இருக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் சமத்துவத்துக்கான வாய்ப்புகள் இந்தியாவில் இருப்பதைக் காட்டிலும் மிகக் குறைவானவை. இது ஒரு பக்கம் மறுபக்கம் ஜெயமோகன் கூறுவது போல சட்டத்தால் மதமாற்றத்தை தடுக்க முடியுமா என்பதுதான். ஒரு மிகவும் நேர்மையான பதில் “இல்லை” என்பதுதான் என நான் உணர்கிறேன். ஜெயமோகன் சுட்டிக்காட்டுவதைப் போல மதமாற்றம் என்பது ஆன்மிக காரணங்களுக்காகவோ அல்லது சமுதாய பொருளாதார காரணங்களுக்காகவோ நடக்கும் போது அது குறித்த நியாயங்கள் ஒரு தனிமனிதனின் உள்ளத்தில் ஏற்பட்டுவிடுகின்றன. உதாரணமாக மதம் மாறினால் கல்லூரி பேராசிரியர் அல்லது பள்ளி ஆசிரியர் வேலை கிடைக்கும் என்பதற்காக மதம் மாறியவர்களை எனக்கு தெரியும். திருமணத்துக்காக மதம் மாறியவர்களை தெரியும். இவர்களில் எவரைக் கேட்டாலும் இவர்கள் தாங்கள் ஆசிரியர் வேலை கிடைப்பதன் நிர்ப்பந்தத்துக்காகவோ அல்லது கொழுத்த வரதட்சணைக்காகவோ மதம் மாறியதாக கூறப்போவதில்லை. அடுத்த இரண்டு தலைமுறைகளில் இவர்கள் மதமாற்றம் ஆன்மிக காரணங்களுக்காகவோ அல்லது சமுதாய நீதிக்காகவோ நடந்தததாக கற்பிதம் உருவாகிவிடும். இந்நிலையில் சட்டம் என்ன செய்ய முடியும்? உண்மையில் சட்டம்-அரசு நிர்வாகம் ஆகியவை சமுதாயத்தை ஆரோக்கியமானதாக மாற்றினால், வெறுப்பியல் பிரச்சாரங்களை தடுத்தால் அதுவே மதமாற்றத்தை ஒரு அரசியல் பிரச்சனையாகாமல் தடுத்துவிடும். உதாரணமாக நாகர்கோவிலின் பிரதான வீதி ஒன்றில் அனைவரும் காணும்படியாக “ஏசு மட்டுமே உயிருள்ள கடவுள்” என எழுதி போட்டிருக்கிறார்கள். அப்போது அல்லா? பன்மை சமுதாயத்தில் மதமாற்ற நோக்குடைய மதப்பிரச்சாரங்கள் செய்யப்படுவதற்கு சில குறைந்தபட்ச நாகரிக விதிமுறைகள் உள்ளன. அவை பின்பற்றப்பட்டாலே பல பிரச்சனைகள் குறைந்துவிடும். கட்டாய மதமாற்ற தடை சட்டம் ஒரு கண் துடைப்புதான். உருவாக்கியிருக்கலாம் என அஇஅதிமுக தலைமை எதிர்பார்த்த ஒரு இந்து ஓட்டுவங்கியை கவர செய்யப்பட்ட அரசியல் தந்திரம் மட்டுமே அது. “கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் நாங்கள் ஒருவரையாவது கைது செய்திருக்கிறோமா?” என அன்றைய அஇஅதிமுக அமைச்சர் கிறிஸ்தவ மதப்பீடத்திடம் தேர்தலின் போது கெஞ்சிக் கேட்டுக்கொண்ட போது ஜெயமோகன் எழுதியதன் உண்மை எனக்கு உரைத்தது.

ஜெயமோகன் எனும் இலக்கியவாதியின் அகப்பரிணாம வளர்ச்சியையும் தொடர்ச்சியையும் இந்நூல் நமக்கு காட்டுகிறது. 2002 இல் பின் 2007 இல் நித்திய சைதன்ய யதியை குறித்த அவரது உரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இது 2002 இல்.

மாபெரும் இலக்கியங்கள் நமக்கு அளிக்கும் சித்திரம் வாழ்க்கையை தொகுத்து காட்டுதல்தான். … ஒட்டுமொத்த மானுட இலக்கியமும் சேர்ந்து மனிதனின் புற உலகை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்று கூறிவிடலாமா என்ன? அகமனதின் விரிவாக்கம், வெளிவிளக்கம்தானே புற உலகம்? அப்படிப்பார்த்தால் ஒட்டுமொத்த மானுட இலக்கியமும் இணைந்து மனிதனின் உலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நித்யாவின் புகழ்பெற்ற உவமையையே சொல்லவேண்டும்…நண்பர்களே தேன் தான் தேனீயை உருவாக்கியது என்று கூறினால் அது ஒரு உயர்ந்த விவேகமே ஆகும்.

இது 2007 இல்.

கார்க்கியின் பிழை என்ன? ‘நான் ஆக்கினேன்., இது எனது ஆக்கம்’ என்றெல்லாம் அவர் எண்ணிக் கொண்டதே. அதுவே பெரும் பற்றாக மாறி அவரைக் கட்டிப்போட்டது. ஒரு பெரும் விளையாட்டில் வெறும் கருவி அவரென அவர் உணரவில்லை. சரி அவருக்கு கடவுள் என்றோ பிரம்மம் என்றோ தர்மம் என்றோ எண்ண முடியாவிட்டால் ‘சரித்திரம்’ என வைத்துக்கொண்டிருக்கலாம். சரித்திரத்தின் லீலையில் தானும் ஒருதுளி என அவர் உணரவில்லை. தன்னைச் சரித்திரத்தின் சிற்பி என்று எண்ணிக் கொண்டார். அந்த சுமையே அவரைக் கூன் விழ வைத்தது. கார்க்கியின் கடைசி நாட்கள். எத்தனை பெரிய நரகம் அது? அவரே உருவாக்கிக் கொண்ட சொந்த நரகம். அந்தப் பெரிய நரகத்திலிருந்து அவரை பகவத் கீதையின் நான்கு சுலோகங்கள் விடுவித்திருக்கும். …நித்யாவின் சொற்களை இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன். உண்மையே எழுத்தாளனின் தேடல் என்றார் நித்யா. படைக்கும் கணத்தில் தன்னகங்காரம் அழியும் போதே பெரும் படைப்பு உருவாகிறது. தன்னைவிட பெரிய விஷயங்களுக்கு படைப்பாளி தன்னை ஒப்புக்கொடுக்கிறான். ஒவ்வொரு கணத்திலும் தன்னில் இருந்து தானை விலக்கி உண்மையை தரிசிப்பதே அவன் தவம்.

இந்த இரண்டு உரைகளும் உண்மையில் முரண்படவில்லை. வியக்கதகு விதத்தில் மாறுபட்ட கோணத்தில் ஒரே விஷயத்தை அவை கூறுகின்றன. ஒரு எழுத்தாளன் சிருஷ்டிக்கிறான். அவனே அதே நேரத்தில் சிருஷ்டியின் கருவியாகவும் இருக்கிறான். இந்த இருநிலைகளையும் இசைவித்து உணரும் கணமே பேரிலக்கியங்கள் பிறக்கும் தருணம். பிரபஞ்சமெங்கும் நிறைந்து பிரபஞ்சத்தின் அனைத்துமாகி நிற்கும் ஒரு மாபெரும் சத்தியத்தின் பலகணியாக தன்னை மாற்றுகிறான் இலக்கியம் படைப்பவன். இதற்காக தன்னகங்காரத்தை அவன் அழித்தாகவேண்டும். இதன் மூலம் பிறக்கும் இலக்கியமே ஒரு பெரும் சிருஷ்டியாகிறது. ஐந்து வருட இடைவெளிகளில் அதே இடத்தில் ஏற்படும் தொடர் உரையாடலை நாம் கேட்க முடிகிறது.ஜெயமோகனுக்கு நன்றி.

“வேதாந்த மரபும் இலக்கிய போக்குகளும்” எனும் கட்டுரை மிக முக்கியமானது. இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் வேதாந்தம் எத்தகைய இயங்கு சக்தியாக செயல்பட்டிருக்கிறது என்பதனை ஜெயமோகன் விவரிக்கிறார். அவரது முடிவு:

பாரதிக்குப் பிறகு தமிழில் பொதுவாக மாயாவாதம், பிரக்ஞை மையநோக்கு என்ற தளங்களில் மட்டுமே வேதாந்தம் வெளிப்பட்டுள்ளது. பாரதி வேதாந்தத்தை சமபாவனைக்கான ஒருமை தரிசனத்துக்கான தத்துவக் கருவியாக கையாண்டவர். அவ்வாறாக அதை ஒரு போராட்ட ஆயுதமாகவும் மெய்ஞானத்துக்கான வழிகாட்டியாகவும் உணர்ந்தவர். அந்நோக்கு பிற்பாடு தமிழில் இல்லை. பிற்பாடு அது வாழ்க்கையைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட பார்வையாகவே நின்றுவிட்டது.

தனிக்குரல் – ஜெயமோகன்
உயிர்மை பதிப்பகம் வெளியீடு
11/29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை-600 018
விலை ரூ 110

Jeyamohan Book

இது நூல் விமர்சனமோ மதிப்புரையோ அல்ல. படித்ததை பகிர்தல். அவ்வளவுதான்.
இந்த தலைமுறையின் மிக முக்கிய எழுத்தாளராகவும் சிந்தனையாளராகவும் அறியப்படுபவர் ஜெயமோகன். அண்மையில் அவர் பல இலக்கிய கூடுதல்களில், கல்லூரிகளில் ஆற்றிய உந
ரகளின் தொகுப்பினை ‘தனிக்குரல்’ எனும் தலைப்பில் உயிர்மை வெளியிட்டுள்ளது. முற்றுப்புள்ளியுடன் விவாதத்துக்கு இடமில்லாத முடிவுகளை தரும் உரைகளல்ல இவை. அத்தகைய
முடிவு தரும் உரைகளை தான் சார்ந்த நிலைப்பாட்டை கொள்கை பிரகடனமாகவோ அல்லது போர்முழக்கமாகவோ கேட்டே பழகிவிட்ட தமிழ் வாசகமனதுக்கு இந்த தொகுப்பிலிருக்கும் உரைகள் ஒரு மனிதன் தொடர்ந்து தன் வாசிப்பின் மூலம் தனக்குள் உரையாடலை நிகழ்த்தி வளர்ந்து செல்லவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகின்றன.  இத்தொகுப்பில் எதையாவது அவரது முடிவாக சொல்லுகிறார் என்றால் அது அவர் அறத்தின் மீது வைத்துள்ள ஆழ்ந்த உணர்தலைதான். அந்த அறம் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தையோ பண்பாட்டையோ மதநம்பிக்கையையோ சார்ந்த அறம் அல்ல. இந்திய மண்ணில் அந்த அறத்தின் வெளிப்பாடு கண்டடையப்பட்டு இன்றளவும் அது ஜீவித்து வருகிறது. மானுடத்தின் ஆழத்திலிருந்து பீறிட்டெழுந்து பிரபஞ்சமனைத்தையும் தழுவிக்கொள்ளும் ஒரு மகத்தான பிரவாகம் அது. இந்தியப்பண்பாட்டின் சாராம்சமாக இந்தியாவின் பேரிலக்கியங்களின் அடிப்படையாக அது அமைந்துள்ளது. சிங்கப்பூரில் அவர் நிகழ்த்திய உரையில் கூறுகிறார்:

ஆனாலும் இந்தியா இன்றும் பேரறம் வாழும் மண்தான். இந்தியாவிற்குச் சுற்றும் உள்ள நாடுகளுடன் மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடும்போது அது நம் முன் துலங்கிவருகிறது. இன்னும் உயிர்ப்புள்ள மக்களாட்சி வாழும் மண் இது.
இன்றும் எளிய குடிமகன் அடிப்படை நியாய உணர்வை இழக்காத மண் இது. …இன்று என் நாடு சுரண்டப்பட்டு கிடக்கலாம். அச்சமும் கீழ்மையும் அங்கு நிலவலாம். ஆயினும் ஆத்மாவில் உறையும் அறம் என்றும் தோற்காது என்றே எண்ணுகிறேன்.”

இந்த மண்ணுறங்கும் அறத்தின் மீது விழும் மழையாக இந்திய இலக்கியத்தை உருவகிக்கிறார் ஜெயமோகன். இந்த உருவகத்திலிருந்து நீட்சியாகவே பிற உரைகள் அமைவதான தோற்றம் படிக்கும் போது ஏற்படுகிறது. அறத்தின் மூர்த்தியாக கம்பன் காட்டும் ராமனின் சித்திரத்தில் கண்கள் க
லங்கும் பேராசிரியர் ஜேசுதாசனை தன் குருக்களில் ஒருவராக காண்கிறார் ஜெயமோகன். நாஞ்சில் நாடனின் கதைகளில் அந்த அறவுணர்வு அனைத்துயிர்களையும் அணைத்து விரியும்
பெரும் விகசிப்பாக படர்ந்தெழுகிறது என காட்டுகிறார். புற்று நோயால் இளவயதில் மறைந்த கேரளாவின் பெண்ணிய இலக்கியவாதியான கீதா ஹிரண்யன் குறித்த அவரது உரை
ஒரு முக்கியமான பார்வையை நம் முன் வைக்கிறது. ஒரு ஆண் இலக்கியவாதி எந்த அளவுக்கு பெண்ணிய எழுத்துக்களின் பின்னால் இயங்கும் உளவியல் சக்திகளையும் அவை எந்த
வரலாற்று-சமுதாய சட்டகத்துடன் எதிர்த்தோ இயைந்தோ வினையாற்றுகின்றனவோ அவற்றுடனான அவற்றின் உறவுகளையும் அறிந்து கொள்ள முடியும்? ஓர் ஆண் இலக்கிய வாசகன் பெண்ணிய உடலிலக்கிய வெளிப்பாடுகளை மட்டுமே பார்க்கிறான் ஆனால் அவற்றினை உருவாக்கும் சக்திகளை புலங்களை அவனால் அறிந்து கொள்ள முடியாது. தான் அறிந்ததாக
தன்னில் ஒரு பகுதியாக கருதப்பட்ட மானுடம் முழுக்க முழுக்க ஒரு விந்தையும் அச்சமும் வெளிப்படக் கூடிய ஒரு முகத்தை காட்டும் போது அவனால் என்ன செய்யமுடியும்? நேர்மையாக அவன் மிகுந்த தன்னடக்கதுடனும் அச்சத்துடனும் வினாக்கள் உள்ளெழும்ப வியக்க மட்டுமே இயலும்.

“தன்னைப் போர்த்தப்பட்டவளாக, புதைக்கப்பட்டவளாக, மூடப்பட்டவளாக, உணரும் பெண்மனம் தன்னிலையை இழக்கும் போது இயல்பாகவே விடுதலையை நாடுகிறது. படைப்பில் நிகழ்வதும் அதுதானா? புரியவில்லை.”

ஒரு சேரி சிறுவன் அங்கு வரும் வெளிநாட்டு சமூகசேவகர் ஒருவரிடம் நடந்து கொள்ளும் விதத்தை அந்த சமூகசேவகர் ஒலிப்பதிவு செய்து பின்னர் நித்ய சைதன்ய யதியின் குருகுலத்தில் பகிர்ந்து கொள்கிறார். ஒவ்வொருமுறையும் கெட்டவார்த்தைகளால் திட்டும் அந்த சிறுவன், இறுதியில் பொட்டி தெரித்து அழுகிறான். இந்த அழுகை குறித்து சைதன்ய யதி கூறுவதை “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன” எனும் கேள்விக்கு ஜெயமோகன் இந்திய பண்பாட்டின் ஒட்டுமொத்த சாரமாக மாணவர்கள் முன் வைக்கிறார்.

ஏன் அவன் அழுகிறான்? குற்ற உணர்வாலா? இல்லை அதைவிட நுட்பமான ஓர் உணர்வு. சிந்தனைகளின் உச்சியை அடையவும் பெரும் வல்லமையுடன் இயற்கையை வெள்ளவும் பொருட்டு படைக்கப்பட்ட ஒரு மானுட ஆத்மாவான அவன் வெறும் ஒரு தெருவாழ் மிருகமாக வாழ நேரிட்டமை குறித்தே அவன் அழுதான். சற்றுமுன் கோபமாக வெளிப்பட்டதும் அந்த அழுகைதான். நித்யா தொடர்ந்தார், “இந்த அழுமை மானுடனைப் பற்றி நான் என்றென்றும் கொண்டிருந்த அழுத்தமான நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறது. மனிதன் இயற்கையின் சாராம்சமான ஒரு வல்லமையை தன்னுள் கொண்டிருக்கிறான். இயற்கையின் உள்ளுறையாக ஒரு பெரும் கருணை, ஒரு மாபெரும் நன்மை உறைகிறது என நான் எப்போதுமே உணர்ந்து வருகிறேன். அதுவே நாம் காணும் இவையனைத்தையும் ஆக்கி நம் முன் விரிந்துள்ளது. அந்த சாரம் மானுடனின் உள்ளும் உறைகிறது….இங்கு நோயும் மரணமும் உள்ளன. இங்கு கொடுமையும் சீரழிவும் உள்ளன. ஆயினும் இதன் சாரம் அளவிலா கருணையும் ஆனந்தமும்தான். மானுட மனமெங்கும் காமகுரோத மோகங்களே கொந்தளிக்கின்றன. ஆயினும் சாராம்சத்தில் உறைவது உண்மையும் நன்மையும் அழகுமே. அதை நான் ‘சத்யம்-சிவம்-சுந்தரம்’ என்பேன்.”

இருத்தலியத்தின் பிதாமகர்கள்  அதன் உச்சத்தில் அடைந்த வெறுமையை -சார்த்தரின் சுவர் சிறுகதையில் ஒரு கணத்தில் தான் செய்த தியாகங்கள் தான் பட்ட பாடுகள் அனைத்தும் ஒரு கணத்தில் பொருளிழந்து தான் வரலாற்றில் துரோகியாக பதிவுசெய்யப்படும் தருணத்தில் புரட்சியாளன் ஒருவனின் பொருளற்ற சிரிப்பாக வெளிப்படும் வெறுமையை- இந்திய நவீனத்துவ இலக்கிய பயணம் சென்றடையாமையை ஜெயமோகன் சுட்டிக்காட்டுகிறார்.

[தொடரும்]